கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்ட 20 குழந்தைகள் பலி : ஒன்றிய அரசிடம் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் கேட்பு
ஜெனீவா : கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து காரணமாக முதல் குழந்தை உயிரிழந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மேலும் சில குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் அடுத்தடுத்து உயிரிழந்தன. மொத்தம் 20 குழந்தைகள் அங்கு உயிரிழந்தன. இதையடுத்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இருமல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் அருகே சுங்குவார்ச்சத்திரத்தில் அவரது மருந்து ஆலை உள்ளது. தமிழக போலீஸாரின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில போலீஸார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதனிடையே குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமான கோல்ட்ரிப் மருத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பான விவரங்களை தருமாறு ஒன்றிய அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது. இந்தியா அளிக்கும் பதிலை பொறுத்தே உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மருந்து பொருட்களில் கடுமையான சோதனை மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வையை கடைப்பிடிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார சேவைகள் இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.