பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவிப்பு
டெல்லி: பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25% இறக்குமதி வரிக்குக் கூடுதலாக, மேலும் 25% வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இந்தியாவின் மொத்த இறக்குமதி வரி 50% ஆக உயரும் நிலை ஏற்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அனுப்பும் பொருட்களுக்கு 50% வரி விதித்ததால் ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் பற்றாக்குறையால் இந்தியாவில் ஆடை உற்பத்தி குறைந்த நிலையில் டிரம்ப் வரியால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். இதனிடையே பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆக.19 முதல் செப். 30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு ஒன்றிய அரசு விலக்கு அளித்துள்ளது.