பருத்தி விலை இருந்தும் விளைச்சல் இல்லை
நெல்லை : நெல்லை, தூத்துக்குடியில் பருத்திக்கு தற்போது விலை இருந்தும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பொதுவாக வறட்சியான பகுதிகளில் பருத்தி சாகுபடி அதிகம் காணப்படும்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மானூர் தாலுகா, தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை சங்கரன்கோவில் தாலுகா, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் பருத்தி ஓரளவுக்கு பயிர் செய்யப்பட்டு வருகிறது.
பருத்தி சாகுபடிக்கு ஏற்ற கரிசல் மண் இப்பகுதிகளில் காணப்படுவதால், பிசான சாகுபடிக்கும், கார் சாகுபடிக்கும் இடைப்பட்ட காலங்களில் பருத்தி சாகுபடியை இப்பகுதி விவசாயிகள் அதிகளவு மேற்கொண்டு வருகின்றனர். இந்தாண்டு பருத்தி சாகுபடியை ஆர்வத்தோடு மேற்கொண்ட விவசாயிகளுக்கு கோடை மழை சிறிது சோதனையை கொடுத்தது.
மே மாதம் முடிவதற்குள்ளாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை அவ்வப்போது சாரல் மழையாக கொட்டியதால், பூ பிடிக்கும் தருணத்தில் பூக்கள் உதிர்ந்தன. மேலும் மகசூல் குறைவு உள்ளிட்ட பல்
ேவறு பிரச்னைகளுக்கு மத்தியில் விவசாயிகள் தற்போது பருத்தி சாகுபடியில் அறுவடை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்தாண்டு ஒரு கிலோ ரூ.60க்கு விற்ற நிலையில், இப்போது ஒரு கிலோ ரூ.70 முதல் 80 வரை விலை போகிறது. நல்ல விலை இருந்தும் போதிய விளைச்சல் இல்லை என்பது விவசாயிகளின் கவலையாக உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மானூர் சுற்றுவட்டாரங்களான மாவடி, நெல்லை திருத்து, கட்டப்புளி, பள்ளமடை, இலந்தகுளம், அலவந்தான்குளம், அழகியபாண்டியபுரம், திப்பனாபுரம் ஆகிய பகுதிகளில் தற்போது பருத்தி சாகுபடி நிறைவுற்று அறுவடை நடந்து வருகிறது.
ஆனால் சாகுபடி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயி ராமன் கூறுகையில், ‘‘பருத்தி சாகுபடியை ஆண்டுதோறும் தை, மாசி மாதங்களில் தொடங்கி, வைகாசி, ஆனி மாதங்களில் அறுவடை செய்து முடிப்போம். பருத்திக்கு இவ்வாண்டு ஓரளவுக்கு விலை உள்ளது. வரும் ஆடி மாதம் பருத்தி விலை மேலும் உயரும் சூழல் உள்ளது.
இப்போது ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்திற்கு விற்கப்படும் நிலையில், இன்னும் விலை உயர வாய்ப்புள்ளது. ஆனால் எங்கள் பகுதிகளில் விளைச்சல் போதிய அளவுக்கு இல்லை. பருத்தி இளஞ்செடிகள் வளரும்போதே கூன் விழுந்து காணப்பட்டன. ஒரு ஏக்கருக்கு உழவு, விதைவித்து, களையெடுப்பு, உரம், மருந்து என ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். அதற்கேற்ப சாகுபடி இல்லை’’ என்றார்.