ஊழலை ஒழிக்க அல்பேனியாவில் அதிரடி; உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர் அறிவிப்பு: அரசியல் களத்தில் புகுந்தது செயற்கை நுண்ணறிவு
வாஷிங்டன்: ஊழலை ஒழிக்கும் முயற்சியாக, உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்றைய உலகின் அனைத்து துறைகளிலும் வேகமாகப் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், தற்போது அரசியல் களத்திலும் நுழைந்துள்ளது. ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ‘டியெல்லா’ (அல்பேனிய மொழியில் சூரியன்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏஐ பாட், நாட்டின் பொது டெண்டர் நடைமுறைகளை மேற்பார்வையிட்டு, ஊழலைத் தடுக்கும் பணியில் ஈடுபடும்.
உலக அரசியலில் திருப்புமுனையாகக் கருதப்படும் இந்த அறிவிப்பை, பிரதமர் எடி ராமா நேற்று வெளியிட்டார். டெண்டர் முடிவெடுக்கும் விசயம் தொடங்கி, பல்வேறு பணிகளை ஏஐ அமைச்சர் பார்க்கும். இதன்மூலம் லஞ்சம், ஊழல், முறைகேடுகளை முழுமையாக ஒழிக்க முடியும் என அரசு நம்புகிறது. பாரம்பரிய அல்பேனிய உடை அணிந்த டிஜிட்டல் அவதாரமாக ‘டியெல்லா’ உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நாட்டின் ‘இ-அல்பேனியா’ தளத்தில் பொதுமக்களுக்கு ஆவணங்கள் தொடர்பான உதவிகளைச் செய்யும் ஆன்லைன் உதவியாளராக ‘டியெல்லா’ செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், உலகம் முழுவதிலுமிருந்து திறமையானவர்களைப் பணியமர்த்தவும் இந்த ஏஐ உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நியமனத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. சிலர் இதை வெளிப்படைத்தன்மைக்கான நடவடிக்கை எனப் பாராட்டினாலும், மற்றவர்கள் ஏஐ அமைச்சரையும் ஏமாற்ற முடியும் என சமூக வலைதளங்களில் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக அல்பேனியா முயன்று வரும் நிலையில், அந்நாட்டிற்கு ஊழல் பெரும் தடையாக உள்ளது. இந்தச் சூழலில், பிரதமர் எடி ராமா எடுத்துள்ள இந்த நடவடிக்கை, ஊழலை ஒழித்து, நிர்வாகத்தை நவீனமயமாக்கும் அவரது அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.