பிணத்தின் மீது அரசியல் செய்பவர் அண்ணாமலை: செல்வப்பெருந்தகை விளாசல்
கோவை: பிணத்தின் மீது அரசியல் செய்பவர் அண்ணாமலை என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினார். கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி: கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய உள்ளோம். டெல்லியில் இருந்து ராகுல்காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் சிறப்பு பிரதிநிதிகளை அனுப்பி உள்ளார்கள்.
கரூர் விஷயத்தில் முதல்வர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, நிவாரணம் அறிவித்தும் ஆணையம் அமைத்ததும், பல மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் அழைத்து வந்தும், மேலும் உயிர் சேதங்களை தடுத்து இருப்பது பாராட்டிற்குரிய விஷயம். கரூர் சம்பவத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து கூறியிருப்பது, பிணத்தின் மீது அரசியல் செய்பவர்கள் இதுபோன்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். இது அநாகரிகமான அரசியல். 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
அப்படி இருக்கும் போது, இதுபோன்ற எண்ணங்கள் வருமா இதுபோன்ற எண்ணங்கள் வந்தால் சிறந்த அரசியல் தலைவர்களாக இருக்க முடியுமா?. விசாரணை ஆணையம் உள்ளது. உண்மை எல்லாம் வெளியில் வரும். அப்போது யார் மீது தவறு என்று தெரியும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அரசியல் தலையீடு என்று பேச வேண்டாம். நாங்களும் யாரையும் குறை சொல்லவில்லை, மிகப்பெரிய மரணம் நடந்து துயரத்தில் இருக்கிறோம். இந்த சூழலில் மலிவான அரசியல் செய்வதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும். விஜய்யும், தவெக நிர்வாகிகளும் கரூர் சென்று பார்க்காததை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* அன்று நம்பிக்கை இன்று இல்லையா?
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், நீதிபதி அருணா ஜெகதீசனை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது யார்?. இதே பழனிசாமி தானே. அன்று அவர் மீது நம்பிக்கை இருந்தது. இன்று விஜய் பொதுக்கூட்ட அசம்பாவிதம் குறித்து விசாரிக்கும் போது மீது நம்பிக்கையில்லையா? நீங்கள் நியமித்த அதே நீதிபதியின் மீது இப்போது நம்பிக்கை இல்லை எனக்கூறுவது சரியல்ல. தயவுசெய்து கூறுகிறேன், அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்றார்.