மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு: மதுரை சரக டிஐஜி விசாரணை துவக்கம்
இதுதொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவின் பேரில், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் மேற்பார்வையில் மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று முதல் விசாரணையை துவக்கினர். இவ்வழக்கில் மத்திய குற்றப்பிரிவினர், சைபர் கிரைம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பெறப்பட்ட பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவின் உதவி கமிஷனர் வினோதினி, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி ஆகியோரிடம் விபரங்கள் பெறப்பட்டன. மாநகராட்சியில் பணிபுரியும் தற்காலிக, நிரந்தர பணியாளர்கள் பட்டியலை குழுவினர் சேகரித்துள்ளனர்.
ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா கூறும்போது, ‘‘வரி முறைகேட்டில் முழுமையான விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
பாஸ்வேர்டுகள் திருட்டு பில் கலெக்டர்கள் தகவல்
மதுரை சிஎம்ஆர் ரோட்டில் உள்ள 4வது மண்டல அலுவலகத்தில் நேற்று வரி முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பில் கலெக்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டனர். பில் கலெக்டர்கள் கூறும்போது, ‘‘வரி வசூல் முறைகேடு 2017ல் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. எங்களது பாஸ்வேர்டுகளை திருடி பயன்படுத்தி, வணிகக் கட்டிடங்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பாஸ்வேர்டு திருடு குறித்தும் விசாரித்து, உண்மை குற்றவாளியை கண்டறிய வேண்டும்’’ என்றனர்.