கோணவாய்க்கால் பகுதியில் கொட்டப்படும் குப்பை; நோய் பரவும் அபாயம்
ஈரோடு : கோணவாய்க்கால் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது கோணவாய்க்கால். இந்த வாய்க்கால் காலிங்கராயன் கால்வாயுடன் இணையும் பகுதியில் உள்ள கரையில் அப்பகுதியினர் தொடர்ச்சியாக குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
குறிப்பாக அதில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் உள்ளன. இதனால், அவை அருகில் உள்ள காலிங்கராயன் கால்வாய் மற்றும் கோணவாய்க்காலில் விழுந்து நீர் நிலைகளில் மாசு ஏற்பட்டு வருகிறது. மேலும், கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் அந்தப் பகுதியில் கடும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, காலிங்கராயன் கால்வாயில் கோணவாய்க்கால் இணையும் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.