சுற்றுவட்டார கிராமங்களில் சோளம் அறுவடை தீவிரம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களான வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன் காளியாபுரம்,பெரும்பதி,எஸ்.குமாரபாளையம்,ஆதியூர்,சென்னியூர்,கோவிந்தனூர், மாப்பிள்ளைகவுண்டன்புதூர்,கோட்டூர்,அம்பராம்பாளையம்,ஆனைமலை,வேட்டைக்காரன்புதுர், ஒடையக்குளம், சமத்தூர், ரெட்டியாரூர் அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் பலர், மானாவாரி பயிரான சோளம் பயிரிட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை மழை மற்றும் பருவமழையின் போது சோளம் பயிரிடுவதை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.கடந்த மே மாதம் துவக்கத்தில் கோடை மழை பெய்ய துவங்கியது.
அதன்பின் விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களை உழவு செய்து அதில் சோளம் பயிரிடுவதை தொடர்ந்தனர். மேலும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் சில வாரமாக தொடர்ந்து பருவமழை இருந்ததால், சோளம் நல்ல விளைச்சலடைந்தது.
இந்நிலையில், பருவமழைக்கு முன்னதாக நன்கு விளைச்சலடைந்த சோளம் அறுவடை செய்து, சோளத் தட்டயாக்கி கால்நடைக்கு தீவனமாக பயன்படுதுகின்றனர்.சோளம் அறுவடை நிறைவடைந்த நிலையில், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, விளைநிலங்களை உழுது தயார்படுத்தும் பணி நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.