கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: வரும் 1ம் தேதி முதல் தொடங்குகிறது
சென்னை: கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 1ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுகுறித்து, சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் 38 மாவட்டங்களில் 2513 (சென்னை மாவட்டம் 377) தலைமைக் கூட்டுறவுச் சங்கங்களில், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் சென்னை மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் வருகிற 1ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் தேர்விற்கு விண்ணப்பித்த விவரங்களுடன் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.