குன்னூர் அருகே ஒரே நாளில் 5 பேரை விரட்டி விரட்டி கடித்த தெருநாய்களால் பரபரப்பு
குன்னூர் : குன்னூர் அருகே ஒரே நாளில் மூதாட்டி உட்பட 5 பேரை கடித்த தெருநாய், குன்னூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர் பகுதிகளில் மட்டுமல்லாமல் பல்வேறு சுற்று வட்டார பகுதிகளிலும் தெருநாய்களின் தொல்லைகள் அதிகம் இருந்து வருகிறது.
தற்போது ஓட்டுபட்டரை, முத்தாலம்மன் கோவில் மற்றும் காமாட்சியம்மன் கோவில் போன்ற பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால், வாகன ஓட்டிகள், மாணவ, மாணவியர், வயதானவர்கள், நடைபயிற்சி செய்பவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பீதியில் உள்ளனர்.சில நேரங்களில் சாலையில் செல்வோரை நாய்கள் துரத்துவதோடு கடித்தும் விடுகின்றன. இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக நேற்று முன்தினம் காமாட்சியம்மன் கோவில் பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று, அவ்வழியாக சென்றோரை துரத்தியது.
மேலும் நேற்று முன்தினம் மாலையில் வள்ளுவர் நகர் பகுதியில் இருந்து மவுண்ட் பிளசன்ட் தேவாலயத்திற்கு மேரி (67), என்கிற மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது மூதாட்டியை பின்தொடர்ந்து வந்த தெருநாய் மூதாட்டியில் காலில் கடித்தது. இதில் மூதாட்டியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மூதாட்டி மேரியை மீட்டு ஓட்டுபட்டரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதலுதவி அளித்தனர். அதேப்போல் நேற்று ஒரே நாளில் அந்த நாய் சாலையில் சென்ற 5 நபர்களை கடித்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நகரில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத பட்சத்தில் இது போன்ற சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, தொடர்ந்து அலட்சியம் காட்டாமல் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை விரைவில் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.