குன்னூர் மவுண்ட் ரோடு வழியாக அரசு பேருந்து செல்வதை கண்டித்து மினி பேருந்துகளை நிறுத்தி போராட்டம்
*பள்ளி மாணவ, மாணவிகள் அவதி
குன்னூர் : குன்னூர் மவுண்ட் ரோடு வழியாக அரசு பேருந்து செல்வதை கண்டித்து குன்னூரில் மினி பேருந்துகள் திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.சுற்றுலா மாவட்டமாக உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு குன்னூரில் இருந்து பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் உபாசி வழியாக சென்று பெட்போர்டு சந்திப்பை கடந்து சிம்ஸ்பார்க் சென்றடையும்.
இதனிடையே கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குன்னூரிலிருந்து பெட்போர்டு மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் மவுண்ட் ரோடு வழியாக இயக்கப்பட்டு வருவதால் மினி பேருந்து உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் பெரிதளவில் பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதனை கண்டித்து நேற்று மதியம் முதல் குன்னூரில் இயக்கப்படும் அனைத்து மினி பேருந்துகளும் குன்னூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாலை நேரத்தில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய குழந்தைகள் முதல் பணிக்கு சென்று திரும்பிய தொழிலாளர்கள் வரை மினி பேருந்துகள் இயக்கப்படாததால் பெரும் அவதியடைந்தனர்.
அனைத்து பேருந்துகளும் குன்னூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் முக்கிய சாலைகளான லெவல் கிராஸ், மவுண்ட்ரோடு, கோத்தகிரி செல்லும் சாலை என அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதற்கிடையே 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து மினி பஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் டி.எஸ்.பி ரவி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இது சம்பந்தமாக அரசு போக்குவரத்து கழக அதிகாரியிடம் ஆலோசனை மேற்கொண்டனர். வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் சுமூக தீர்வு காணப்படும் என்ற உறுதியளித்ததையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை விலக்கி கொண்டனர்.