குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஆபத்தான மின் கம்பங்களை அகற்ற கோரிக்கை
குன்னூர் : குன்னூர் மலைப்பாதையில் ஆபத்து ஏற்படும் வகையில் சாய்ந்து நிற்கும் மின்கம்பங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் கனரன வாகனங்களுக்கு ஆபத்துகள் ஏற்படுத்தும் வகையில் தாழ்வான நிலையில் செல்லக்கூடிய மின்கம்பிகளை குன்னூர் மின்வாரிய துறையினர் சீரமைத்து, மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது படர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றினர். இருந்த போதிலும் குன்னூர் மலைப்பாதையில் உள்ள குன்னூர் - காந்திபுரம் இடையே 2 மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
பல வாகனங்கள் அவ்வழியாக சென்று வரும் சூழலில் இது போன்ற மின் கம்பங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் மின் வாரிய துறையினர் முறையாக ஆய்வு மேற்கொண்டு ஆபத்து ஏற்படும் வகையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.