கள்ளக்காதல் தகராறில் சென்னை சமையல் மாஸ்டர் கொலை; வாலிபர் கைது: மனைவியிடம் விசாரணை: சிறுமியால் சிக்கிய கொலையாளி
தகவலறிந்து வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் எஸ்பி மயில்வாகனன் விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொலை நடந்த இடத்தில் டிஎஸ்பி நந்தகுமார் இன்று விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் என்கிற திருமூர்த்தி (21) என்பவரை பிடித்து டிஎஸ்பி விசாரணை நடத்தினார். அப்போது, பாரத்தை வெட்டி கொன்றது சஞ்சய் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சஞ்சய் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:
சென்னையில் பாரத், சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி நந்தினி, மகள்களுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த சஞ்சய் என்கிற திருமூர்த்தி (21), என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த விஷயம் பாரத்துக்கு தெரியவர இருவரையும் கண்டித்துள்ளார். இதுதொடர்பான தகராறில் நந்தினியை தாக்கியுள்ளார். ஆனாலும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லையாம். கணவர் தாக்கியதை சஞ்சயிடம் கூறி நந்தினி அழுதுள்ளார். இதனால் பாரத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி நேற்றிரவு கடைக்கு செல்லலாம் என நந்தினி அழைத்துள்ளார். அதன்படி பாரத், தனது மனைவி, மகளுடன் சென்றார். ஏற்கனவே திட்டமிட்டபடி சாலையில் தென்னை மட்டைகளை போட்டு வைத்துவிட்டு மறைவாக கத்தியுடன் சஞ்சய் தயாராக நின்றிருந்தார். அவ்வழியாக வந்த பாரத், தென்னை மட்டை மீது மோதி கீழே விழுந்தபோது சஞ்சய் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
முதலில் விபத்தாக சித்தரிக்க நந்தினியும், சஞ்சயும் முயன்றுள்ளனர். பொதுமக்கள் வந்து பார்த்தபோது, விபத்து என நந்தினி தெரிவித்துள்ளார். கொலை செய்த சஞ்சயும் சில நிமிடங்களில் வந்து கூட்டத்தில் நின்றுள்ளார். அப்போது, சஞ்சயை பார்த்த பாரத்தின் மகள், கொலை செய்த சஞ்சயை கையை காட்டியுள்ளார். இதனால் சஞ்சய் தப்பியோடிவிட்டார். பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் செல்போன் டவரை கொண்டு அவரை பிடித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து சஞ்சயை கைதுசெய்தனர். இந்நிலையில் இந்த கொலையை சஞ்சய் மட்டும் தனியாக செய்திருக்க முடியாது என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவருக்கு வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா? என 2 தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நந்தினியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.