மதம் மாறுவது முற்றிலும் ஒரு இந்திய குடிமகனின் தனிப்பட்ட சிந்தனை நடைமுறை: ஜவாஹிருல்லா
சென்னை: மதம் மாறுவது முற்றிலும் ஒரு இந்திய குடிமகனின் தனிப்பட்ட சிந்தனை நடைமுறை என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறுகையில், உத்தரப் பிரதேச சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை குறித்த வழக்கு ஒன்றை சமீபத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம் அதனை ரத்து செய்துள்ளது. அப்போது மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை முற்றிலும் ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.
மனசாட்சி உரிமையையும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றவும் நடைமுறைப்படுத்தவும் பரப்பவும் உரிமை அளிக்கும் அரசியலமைப்பின் பிரிவு 25ம் பிரிவு தனி மனிதருக்குரிய உரிமையைக் அளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு நம்பிக்கையைத் தேர்வு செய்து அதை வெளிப்படுத்தவோ அல்லது வெளிப்படுத்தாமல் இருக்கவோ உரிமை உண்டு. இதில், "அரசின் தலையீடு கூடாது" என்ற அர்த்தத்தில் ஒரு தனிநபருக்கு இப்பிரிவு முழு சுயாட்சி அளிக்கின்றது. மதமாறுவது முற்றிலும் ஒரு இந்திய குடிமகனின் தனிப்பட்ட சிந்தனை நடைமுறை.
மதமாறும் உரிமையை ஒரு தனிநபர் தனது துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையுடன் உச்ச நீதிமன்றம் அமர்வு இத்தீர்ப்பில் ஒப்பிட்டுள்ளது. மேலும் இரண்டு வயது வந்தவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் குடும்பம், சமூகம் அல்லது குலத்தின் எந்த உடன்பாடும் தேவையில்லை என்பதும் அரசியலமைப்பு தரும் உரிமையாகும். இதில், பிரிவு 21 இல் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமையும் மனசாட்சியின் உரிமையும் ஒன்றொண்டு ஒன்று தொடர்புடையவை. அவை அரசின் கட்டுப்பாட்டை தாண்டிய உரிமையாகும்.
பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சியால் நடத்தப்படும் மாநில அரசுகள் மதமாற்றத்தைத் தடுக்கும் சட்டங்களை ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் இயற்றுகின்றன. அசாம் மாநிலத்தை ஆளும் பாஜக அங்கும் மதமாற்ற சட்டத்தை இயற்ற திட்டமிட்டுள்ள நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.மதமாற்றத்தை "லவ் ஜிஹாத்" என அசாம் முதலமைச்சர் மீண்டும் மீண்டும் கூறும் கூற்றுகள், அவரது அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள மதமாற்றத் தடை சட்டம் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது பற்றியது அல்ல,
மாறாக தனி நபரின் மத நம்பிக்கையை கண்காணிப்பது மற்றும் சிறுபான்மையினரை குறிவைப்பது பற்றியது என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாகவோ அல்லது மோசடியாகவோ மதமாற்றத்தைத் தண்டிக்க அசாமில் ஏற்கனவே ஏராளமான சட்ட விதிகள் உள்ளன. அங்கு மதமாற்றத் தடை சட்டம் தேவையற்றது. அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. சமூகங்களிடையே சந்தேகத்தை விதைப்பதை விட, மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பை வலுப்படுத்துவதில் அசாம் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.