காதலன் கொடுத்த `இதழ்’வீச்சால் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய `வாள்வீச்சு’ வீராங்கனை விடுவிப்பு
லாசானே: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை யசோரா திபஸ். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இவர், கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். அதாவது அவரது காதலரான அமெரிக்க வாள்வீச்சு வீரர் ரேஸ் இம்போடன், யசோரா திபஸை முத்தமிட்டபோது எச்சில் மூலம் `ஆஸ்டரின்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து அவரது உடலுக்குள் புகுந்து புத்துணர்ச்சி கொடுத்ததாக உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை குற்றம் சாட்டியது. ஆனால் இந்த புகாரில் இருந்து அவரை சர்வதேச வாள்வீச்சு சம்மேளனத்தின் ஒழுங்கு கமிட்டி விடுவித்தது. இதனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் அவரால் பங்கேற்க முடிந்தது.
இதை எதிர்த்து உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. யசோரா திபஸுக்கு 4 ஆண்டு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `முத்தமிடும் போது எச்சில் வழியாக ஊக்கமருந்தின் தாக்கம் அடுத்தவருக்கு செல்லும் என்பது உண்மை தான். ஆனால் முத்தமிடும்போது தனது காதலர் ஊக்கமருந்தை உட்கொண்டு இருந்தார் என்பது யசோரா திபஸுக்கு தெரியாது. அவர் வேண்டுமென்றே ஊக்கமருந்து விதியை புறக்கணிக்கவில்லை’ என்று கூறி குற்றச்சாட்டில் இருந்து யசோரா திபஸை விடுவித்தது.