தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பிளவக்கல் பெரியாறு அணையில் நீர் திறப்பு: குளம், கண்மாய்கள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
வத்திராயிருப்பு: தொடர் மழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், குளம், கண்மாய்கள் நீர் நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 47 அடி உயரமுள்ள பிளவக்கல் பெரியாறு அணை அமைந்துள்ளது.
மாவட்டத்தில் மிகப்பெரிய அணையான இதன் மூலம் எஸ்.கொடிக்குளம், பெரியகுளம், விராகசமுத்திரம் கண்மாய் உட்பட 45 கண்மாய்களின் தண்ணீர் தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து கடந்த சில தினங்களாக வத்திராயிருப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது. மேலும் அணைக்கு வினாடிக்கு 347 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு அணையிலிருந்து வினாடிக்கு 402 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.