தொடர் மழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதியாக குறைந்தது
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக இங்கு அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உற்பத்தி துவங்கி அக்டோபர் வரை 9 மாதங்கள் நடைபெறும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்தமாக 6 லட்சம் டன் இலக்காக வைத்து உப்பு உற்பத்தி செய்யப்படும். அதில் தொழிற்சாலைக்கு தேவையான 4 லட்சம் டன் உப்பு மற்றும் 2 லட்சம் உணவு உப்பு உற்பத்தி செய்யப்படும். இந்தாண்டு ஜனவரி முதல் அவ்வப்போது பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி அடிக்கடி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதனால் இந்தாண்டு 50 ஆயிரம் டன் உணவு உப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான 2 லட்சம் டன் உப்பு உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. தற்போது உப்பு உற்பத்தி நிறைவு பெற்று விட்டது. ஆனால் வேதாரண்யத்தில் மழைக்கால விற்பனைக்காக 15,000 டன் உப்பு மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் 2026ம் ஆண்டு ஜனவரியில் தான் உப்பு உற்பத்தி துவங்கும். உப்பு குறைவாக இருந்தாலும் ஒரு டன் உப்பு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை மட்டுமே விற்பனையாகிறது.