தொடர் மழையால் நிரம்பும் தண்டுகாரம்பட்டி ஏரியில் 6,000 மீன் குஞ்சுகள் இருப்பு
*இளைஞர்கள் நடவடிக்கை
நல்லம்பள்ளி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாகலஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தண்டுகாரம்பட்டி கிராமத்தில், சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் சார்ந்த தொழிலையே செய்து, தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். தொடர் மழை காரணமாக, தண்டுகாரம்பட்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் ஏரியை சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். பருவமழையால் ஏரி நிரம்பி வருவதால், ஏரியில் மீன் குஞ்சுகளை வளர்ப்புக்காக விடலாம் என முடிவு செய்து தண்டுகாரம்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சுமார் 6ஆயிரம் மீன் குஞ்சுகளை விலைக்கு வாங்கி வந்து வளர்ப்புக்காக ஏரியில் விட்டுள்ளனர். இந்த மீன் குஞ்சுகள் நன்கு வளர்ந்து, சுமார் 4 மாதத்தில் அரை கிலோவிற்கு மேல் வளரும் என்றனர். இது அப்பகுதி பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.