தொடர் மழையால் நாசரேத் பகுதியில் குளங்கள் நிரம்புகின்றன
*விவசாய பணிகள் துவக்கம்
நாசரேத் : நாசரேத் பகுதிகளான பிரகாசபுரம், மூக்குப்பீறி, வெள்ளமடம், ஞானராஜ்நகர், மணிநகர், வகுத்தான்குப்பம், வாழையடி, வெள்ளரிக்காயூரணி, நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. பொது மக்கள் வெளியே வருவதற்கு கூட முடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நாசரேத் அருகே உள்ள பெரியகுளம், நொச்சிக்குளம், கீழபுதுக்குளம், முதலைமொழிகுளம், புதுக்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்புகின்றன.
தொடர்ந்து பெய்த மழையினால் வெள்ளமடம், வெள்ளரிக்காயூரணி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் விவசாயிகள் தங்கள் வயல்களில் நாற்றுகள் நடும் பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.