தொடர் மழையால் மாதனூர் அருகே பாலூர் ஏரி நிரம்பியது 300 ஏக்கர் பயனடையும்
*குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆலோசனை
ஆம்பூர் : மாதனூர் அருகே உள்ள பாலூர் ஏரி நிரம்பியதால் சுமார் 300 ஏக்கர் விளைநிலத்திற்கு பாசன வசதி பெற உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழைக்காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதேபோல் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, ஏலகிரி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பெரிய ஏரி, மடவாளம் ஏரி, செலந்தம்பள்ளி ஏரி, முத்தம்பட்டி ஏரி, கொடுமாம்பள்ளி ஏரி, ஏலகிரி கிராம ஏரி, மாதனூர் அருகே உள்ள பாலூர் ஏரி உள்ளிட்ட 19 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
மாவட்டத்தில் ஆம்பூர், மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்பிடிப்பு பகுதிகளான ஆம்பூர், ஒடுகத்தூர் வனசரக காடுகளில் பெய்யும் மழையானது கானாறுகள் வழியாக பாலூர் ஏரியை வந்தடைகிறது. சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பாலூர் ஏரி தொடர் கனமழையால் நிரம்பி உள்ளது.
தற்போது இந்த ஏரி உபரிநீர் தொடர்மழையால் வெளியேறி மாதனூர், எம்.சி.பகுதி, சாமிநாதபுரம், பாரதிநகர், எம்.எம்.நகர் வழியாக நொண்டிகுப்பம் அருகே பாலாற்றில் சென்று கலக்கிறது. தொடர்மழையால் இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஒன்றியகுழுதலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பிடிஓ சுரேஷ்பாபு, ஒன்றிய பொறியாளர் சரவணன், பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி முரளி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த பகுதிகளில் பாதிப்பு நேராவண்ணம் உபரிநீரை அருகில் உள்ள சுமார் 80 ஏக்கர் பரப்பளவிலான தோட்டாளம் ஏரிக்கு திருப்ப சாத்தியகூறுகள் குறித்து ஆலோசனை நடந்தது.
இதுகுறித்து உரிய ஆய்வு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்யவும், இதனால் தோட்டாளம் , பாலூர் உட்பட 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலம் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.