தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்வு!
சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது. நாளை ஆகஸ்ட் 15(வெள்ளிக்கிழமை) சுதந்திர தினத்தை தொடர்ந்து வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினங்களாக உள்ளது. இதனை அடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வந்து வேலை செய்பவர்கள் என பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் போட்டிப்போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உள்ளூர் விமான கட்டணங்களும் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து மதுரை செல்ல 4000 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக 600 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை ஆம்னி பேருந்து கட்டணம் வசூல் செய்யப்படும். சென்னை - நெல்லை, சென்னை - சேலம், சென்னை - திருச்சி என பல்வேறு வழித்தடங்களுக்கும் ரூ.1500 முதல் ரூ.3000 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.