தொடர் கனமழைக்காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
*ஏலகிரிமலை வெறிச்சோடியது
ஏலகிரி : தொடர் கனமழை காரணமாக ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால் பல இடங்களில் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரிமலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இம்மலையை ஏழைகளின் ஊட்டி, மலைகளின் இளவரசி எனவும் அழைப்பர்.
இங்கு வாராந்தோறும் விடுமுறை நாட்களில் பல்வேறு வெளி மாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திரள்வது வழக்கம். இம்மலையில் உள்ள 14 கொண்டை ஊசி வளைவுகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும்.
இதேபோல் இங்குள்ள படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுத்தலங்கள், பறவைகளின் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக்குளம், ஸ்ரீ கதவநாச்சியம்மன் திருக்கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்கள் இம்மலையில் உள்ளன.
இம்மலையில் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்றும், நேற்றுமுன்தினமும் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது.
இதன்காரணமாக படகு இல்லத்தில் பெரும்பாலான படகுகள் பயன்படுத்தப்படாமல் கரையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதேபோன்று தங்கும் விடுதிகள் உள்ளிட்டவையும் வெறிச்சோடி காணப்பட்டது. ஏலகிரிமலையில் திடீர் திடீரென சாரல் மழை பெய்துவருவதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது. இருப்பினும் மழைக்காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.