தொடர் கனமழையால் கடல்போல் காட்சியளிக்கும் காமராஜர் சாகர் அணை
ஊட்டி : தொடர் மழை காரணமாக ஊட்டி காமராஜர் சாகர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சி அளிக்கிறது.மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மலைகளின் குறுகே அணைகள் கட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டு அதன் மூலம் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மூலம் சுமார் 800 மெகாவாட்க்கும் மேல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஊட்டி- கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது.
இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரை கொண்டு மாயார், சிங்காராவில் உள்ள மின் நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர, கோடை காலங்களில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உள்ள வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும்.இந்நிலையில், நடப்பு ஆண்டு கோடை காலத்திலும் ஓரளவிற்கு மழை பெய்தது.
அதன் பின் ஜூன் மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழையானது முன்கூட்டியே மே மாதம் துவங்கியது. துவங்கியது முதல் கனமழை கொட்டியது. குறிப்பாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா பகுதிகளிலும், அணைகள் அமைந்துள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்தது.
ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை பெய்த நிலையில் நீர்நிலைகள், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதேபோல் காமராஜர் சாகர் அணையிலும் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சி அளிக்கிறது. தற்போது 50 அடிக்கும் மேல் நீர்மட்டம் உள்ளது. இதனை இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.