நீர்ப்பிடிப்பில் தொடரும் மழையால் வெள்ளப்பெருக்கு கும்பக்கரை அருவியில் 2வது நாளாக குளிக்க தடை
தேனி: நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு தொடரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று 2வது நாளாக வனத்துறையினர் தடை விதித்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த அருவியில் தினமும் ஏராளமானோர் குளித்து செல்கின்றனர். அதிக நீர்வரத்து, வெள்ளப் பெருக்கின்போது அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், பாம்பார்புரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் வனத்துறையினர் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேற்றினர். அருவி பகுதிக்கு செல்லவும் தடை விதித்தனர்.
இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. இதனால் இன்று 2வது நாளாக அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் கும்பக்கரை அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.