தொடரும் உயிர்பலி....!
ஒன்றிய பா.ஜ அரசின் அழுத்தம் காரணமாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்தும் சிறப்பு பணிகளை (எஸ்.ஐ.ஆர்) மேற்கொண்டு வருகிறது. பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்) நடந்து வருகிறது. இப்பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், கடுமையான பணிச்சுமையால் அவதியுறுகின்றனர். உயரதிகாரிகளின் மிரட்டல்களால், மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணிச்சுமை தாங்காமல் பல ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளிவருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் முறையற்ற திட்டமிடல் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே ஊழியர்களின் தொடர் மரணங்களுக்கு காரணமாக உள்ளது. இது, அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தினமும் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப்படுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முடிக்காவிட்டால் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாகவும் உயரதிகாரிகளால் மிரட்டப்படுகின்றனர். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, நாடு முழுவதும் தேர்தல் பணியாளர் தற்கொலை தொடர்கிறது.
தமிழகத்திலும் இந்த துயரம் துரத்துகிறது. இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் பகவதிராஜா, எஸ்ஐஆர் பணிச்சுமை காரணமாக, பணியில் இருந்தபோது, திடீரென மேஜையில் இருந்த கத்தியை எடுத்து, தனது இடது கையில் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். திண்டிவனம் நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஆனந்தன் எஸ்ஐஆர் பணிச்சுமையால் அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். கும்பகோணத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் சித்ரா, எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அதிகமான அழுத்தம், நேரக்கட்டுப்பாடு காரணமாக மனஉளைச்சல் ஏற்பட்டு, அதிகளவில் தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார்.
கோவையில் இரண்டு தாசில்தார்கள் எஸ்ஐஆர் பணிச்சுமை காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டனர். நாடு முழுவதும் 20 நாட்களில் அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஒருசில அரசியல் எஜமானர்களை மகிழ்விக்க, ஒன்றிய தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் பணிகளை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. இதனால், பிஎல்ஓ போன்ற களப்பணியாளர்களுக்கு மனிதாபிமானமற்ற முறையில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகின்றன.
ஆனாலும், ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் பணிச்சுமையை குறைக்காமல், நடந்துகொள்வது தேர்தல் பணி ஊழியர்களிடையே கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி உயிர்பலிகளை தடுக்க, உடனடியாக எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ஒன்றிய அரசு முரண்டுபிடித்து வருகிறது. இது, பெரும் விபரீதத்தில் போய் முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.