சங்ககால புலவர் நல்லூர் நத்தத்தனாரின் நினைவுத்தூணை மாற்று இடத்தில் அமைக்க கோரிக்கை
இவரது நினைவை போற்றும் வகையில் 1958ம் ஆண்டு நல்லூர் கிழக்குக் கடற்கரை சாலையோரம் அவருக்கு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டது. அதன்பின் 1992ல் தமிழக அரசு சார்பாக அவரது திருவுருவச்சிலை அருகே நினைவுத் தூண் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ம் தேதி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில் தமிழ் கவிஞர் நாள் விழாநல்லூர் நத்தத்தனார் நினைவுத்துாண் பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது கிழக்கு கடற்கரை சாலை, நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், சாலையோரம் உள்ள நல்லூர் நத்தத்தனார் நினைவுத் துாணை அதே பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2023ம் ஆண்டு தமிழ் கவிஞர் நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அப்போதைய கலெக்டர் ராகுல்நாத் நினைவுத்துாணை மாற்று இடத்தில் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக கூறியிருந்தார்.
அதன்பின் அவர் வேறு இடத்திற்கு மாறுதலாகிச் செல்ல அதிகாரிகள் அப்பணியை கிடப்பில் போட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நினைவுத்தூண் அமைக்க மாற்று இடம் தேர்வு செய்து, நினைவுத் தூணினை நல்லூர் பகுதியிலேயே அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.