திருவொற்றியூர்: மாதவரத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய விலை உயர்ந்த கண்ணாடிகள் கன்டெய்னர் பெட்டியில் அடைத்து, நேற்று மதியம் அதை ட்ரெய்லர் லாரியில் ஏற்றி, மணலி புதுநகரில் உள்ள சரக்கு பெட்டகத்திற்கு லாரி ஓட்டுநர் எடுத்துச் சென்றார். மாதவரம் 200 அடி சாலையில் இருந்து மணலி புதுநகர் செல்ல எம்எப்எல் சந்திப்பு வளைவில் திரும்பியபோது, ட்ரெய்லர் லாரி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில், உள்ளே இருந்த கண்ணாடிகள் உடைந்து சாலையில் சிதறின. ஓட்டுனர், லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பினார். சாலை நடுவில் கண்ணாடிகள் சிதறியதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கன்டெய்னர் பெட்டியை நிமிர்த்தி, சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.