தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை; அண்ணாமலை மீது நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு: கட்சியை சீரழித்து விட்டதாக குற்றச்சாட்டு
சென்னை: தமிழக பாஜ நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு அண்ணாமலைதான் காரணம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்குதல் நடத்தினார். இது நிர்வாகிகள் கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். இன்று காலையில் பாஜக நிர்வாகிகளுக்கு விருந்தளித்தார். அந்த விருந்துடன் நிர்வாகிகளுடன் ஒன்னரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், எச்.ராஜா, மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அணிகளின் பொறுப்பாளர் கே.டி.ராகவன், துணை தலைவர் சக்கரவர்த்தி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், கருப்பு முருகானந்தம், நடிகை குஷ்பு, இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஜெ.சூர்யா உள்ளிட்ட அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், ‘கடந்த மக்களவை தேர்தலில் நாம் ஏன் ஒரு சீட்டில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதற்கு யார் காரணம். யார் பொறுப்பு ஏற்பது. திட்டமிட்டு கூட்டணி அமைத்திருந்தால் பெரிய வெற்றியை பெற்றிருக்கலாம். ஆனால் தோல்வி அடைந்தோம். அதோடு கோவையில் நான் பேட்டி அளிக்கும்போது ஒரு ஓட்டல் உரிமையாளர் பேசிய வீடியோ வேண்டும் என்றே வெளியாகியது. அதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் மாநில கட்சி மட்டும் ஏன் கேட்டது. எனக்காக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை. கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நான் விரும்பவில்லை. கெட்ட பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன். கட்சிக்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்த மாட்டேன்.
ராமநாதபுரத்தில், ரயில்வே பாலம் தேவைப்பட்டது தெரியவந்தது. இதற்காக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை வைத்தேன். அவரும் ரயில்வே பாலம் கட்டித் தருவதாக உறுதியளித்தார். ஆனால் அந்த மாவட்டத் தலைவர், என்னை கேட்காமல் எப்படி கோரிக்கை மனுவை கொடுக்கலாம். என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்று கேட்கிறார். பொதுமக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்க மாவட்ட தலைவர்களினம் அனுமதி கேட்க வேண்டுமா? மக்களுக்கு செய்ய இவர்களிடம் நான் போய் நிற்க வேண்டுமா? இனிமேல் புதிய தலைமை இதுபோன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்த, மாவட்ட நிர்வாகிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தன்னிச்சையாக யாரும் செயல்படக் கூடாது. கட்சியை வளர்க்க வேண்டும். வெற்றியை பெற்றாக வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும்.
நமக்குள் சண்டை போடக்கூடாது என்று அண்ணாமலை குறித்து மறைமுகமாகவும், அவர் மாநில தலைவராக இருந்தபோது நடந்த சம்பவங்களை கண்டித்தும் கடுமையாக பேசினார். கடந்த மக்களவை தோல்விக்கு அண்ணாமலைதான் காரணம் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு குற்றம்சாட்டி பேசினார். இது நிர்வாகிகள் மத்தியில் கடும் பரபரப்பையும், சூட்டையும் ஏற்படுத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு சென்னையில் இருந்தும், அண்ணாமலை மட்டும் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய வீட்டிலேயே இருந்து கொண்டார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆலோசனைக் கூட்டத்தை அண்ணாமலை வேண்டும் என்றே புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.