கட்டுமான பணியில் விபத்து நடந்த 48 மணி நேரத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
சென்னை: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், தமிழ்நாடு அரசு மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமம் - தமிழ்நாடு பிரிவு இணைந்து தொழில்வழி சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கும் விழாவை சென்னையில் நடத்தின. விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை விருந்தினராக பங்கேற்று, மாநிலத்தின் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்களை வழங்கினார்.
அவர் பேசியதாவது: தொழிற்சாலைகள் பணியிடத்தில் விபத்துகளை தடுப்பதற்கு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை கடைபிடிக்க வேண்டும். கட்டுமான பணியிடத்தில் விபத்து நிகழ்ந்த 48 மணி நேரத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா தேசிய பாதுகாப்பு குழுமத்தின் பொது இயக்குநர் லலித் ஆர்.கபானே சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, “பாதுகாப்பினை கடைபிடித்தல் ஒரு சட்டப்பூர்வமான கடமை என்று இல்லாமல், அது மனித உயிரை காக்கும் நோக்கம் கொண்டது என கருத வேண்டும்” என்றார். தேசிய பாதுகாப்பு குழுமம் - தமிழ்நாடு பிரிவு மற்றும் இயக்குநர், செ.ஆனந்த் பேசும்போது, “ஒவ்வொரு தொழிற்சாலையும் விபத்து இல்லாத பணியிடத்தை உருவாக்குவதற்கு பயிற்சியின் முக்கியத்துவம் கருதி, அனைத்து பயிற்சி வகுப்புகளிலும் தொழிற்சாலைகள் பங்கேற்க வேண்டும்” என்றார்.
தேசிய பாதுகாப்பு குழுமம் - தமிழ்நாடு பிரிவின் சார்பாக அதன் துணை தலைவர் த.பாஸ்கரன், செயலாளர் ப.ராஜ்மோகன் மற்றும் பொருளாளர் கே.ஜெகநாதன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதிலும் 101 தொழிற்சாலைகளுக்கு தொழில்வழி சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விருதுகளும், 37 தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு போட்டி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விருது வழங்கும் விழாவில் நிர்வாக பிரதிநிதிகள், பாதுகாப்பு அலுவலர்கள், தேசிய பாதுகாப்பு குழுமம் - தமிழ்நாடு பிரிவின் உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.