கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்
*பொதுமக்கள் கோரிக்கை
கடலூர் : கடலூர் திருப்பாதிரிபுலியூர் பான்பரி மார்க்கெட் கட்டுமான பணியை துரிதப்படுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாநகரின் பிரதான பகுதியாக திருப்பாதிரிப்புலியூர் விளங்கி வருகிறது.
இங்கு பேருந்து நிலையம், ரயில் நிலையம் அமைந்திருப்பதால் கடலூர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் இப்பகுதி அமைந்துள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் திருப்பாதிரிப்புலியூரில் பான்பரி மார்க்கெட் கட்டப்பட்டது. இங்கு, 100க்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இந்த கடைகள் கட்டப்பட்டு நீண்ட காலம் ஆனதால், மேல்தளத்தில் இருந்த சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன.
இதனால் வியாபாரிகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. மேலும், மழை காலங்களில் உள்ளே தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். மேலும், மழைநீர் தேக்கம் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதே நிலைமை முதுநகர் மார்க்கெட் மற்றும் மஞ்சக்குப்பம் மார்க்கெட்டிலும் நிலவியது.
இதையடுத்து திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், முதுநகர் மார்க்கெட் மற்றும் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டில் இருந்த பழைய கடைகளை அகற்றிவிட்டு, புதிதாக கட்ட மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி, 3 இடங்களிலும் புதிய கடைகள் கட்ட ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இதற்காக பான்பரி மார்க்கெட் தற்காலிக இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
மார்க்கெட் வளாகத்திற்கான கடைகள், கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்தம் உள்ளிட்ட நவீன வசதிகள் மார்க்கெட்டில் ஏற்படுத்தப்படுகிறது. தற்போது இதன் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், மேலும் விரைவுபடுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துரிதமாக கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.