சிதம்பரத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சுற்றுலா ஓய்வு இல்லம் கட்டும் பணி தீவிரம்
சிதம்பரம் : சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில், தில்லை காளியம்மன் கோயில், பிச்சாவரம் சுற்றுலா தளம் உள்ளிட்ட ஆன்மீக தலங்களும், சுற்றுலா மையங்களும் நிறைந்த ஒரு நகரமாக திகழ்ந்து வருகிறது.
இதனால் சிதம்பரம் பகுதிக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். கோயில் நகரமான சிதம்பரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் தனியார் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிக அளவில் பணம் கொடுத்து தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வந்தது.
அதேபோல குறிப்பிட்ட திருவிழா நாட்களின் போதும் நகர் பகுதியில் வெளி மாநில பொதுமக்கள் போதிய தங்கு இடம் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் சிதம்பரம் ரயில்வே பீடர் சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், அதிநவீன வசதிகளுடன் கூடிய சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்க மையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த சுற்றுலா இல்லத்தில் 24 தங்கும் அறைகள், கலையரங்கம், உணவருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பளிங்கு கற்கள் பதிப்பது, சுற்றுச்சுவர் கட்டுமான பணி, பெயிண்டிங் வேலை மற்றும் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகளை மழை காலம் வருவதற்குள் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பூ வியாபாரி மேகலா கூறுகையில், சிதம்பரத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், சுற்றுலா இல்லம் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக வெளியூர், வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்தில் ஓட்டல்களில் அதிகளவு செலவு செய்து தங்கி ஆன்மிக தலங்கள், பிச்சாவரம் சுற்றுலா மையத்தை சுற்றி பார்த்து வந்தனர்.
தற்போது இந்த சுற்றுலா இல்லம் மூலம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயனடைவர். எனவே இந்த சுற்றுலா இல்லத்தை விரைந்து கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வந்தால், சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவர். எங்களைபோல சிறு வியாபாரிகளும் லாபம் ஈட்ட வாய்ப்பு ஏற்படும், என்றார்.