அரசமைப்பு சட்டத்தின் மாண்புகளை பாதுகாக்க உறுதி எடுப்போம்: ஜவாஹிருல்லா அறிக்கை
சென்னை: அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகளை பாதுகாக்க உறுதி எடுப்போம் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைக்குப் பிறகு, இந்த நாட்டு மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், சமத்துவம், சமூக நீதி ஆகியவை உறுதிப்படுத்தப்பட்ட நாள் தான் அரசியலமைப்பு தினம். அம்பேத்கர் தலைமையில் உருவான அமைச்சரவை வரைவு குழுவின் பெரும் பங்களிப்பை நாம் அனைவரும் நினைவுகூர வேண்டியது அவசியம். அரசியல் அமைப்பு என்பது இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பு. சாதி, மதம், மொழி, பிராந்தியம் என்பதனை தாண்டி அனைவரும் சமமான குடிமக்களென அறிவித்த வரலாற்று சாசனமாக அமைந்துள்ளது. நமது அரசமைப்பு சட்டம்.
ஆனால் இத்தகைய முன்னேற்றமான, மனிதநேயமான அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட வேளையில், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் உட்பிரிவு அமைப்புகள் தொடர்ந்து அதனை விமர்சித்து வந்தன என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. நாட்டின் அரசியல் அமைப்பு மீது தாக்குதல் ஏற்படும் பொழுது அதை எதிர்க்கும் மக்கள் இயக்கங்களின் பொறுப்பு அதிகரித்துள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க இது மிகவும் அவசியம்.அதன்படி, அரசமைப்பின் முகப்புரையை வாசித்து அரசு அலுவலர்கள் உறுதி எடுக்கும் நிகழ்வை முன்னெடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.