24 மணி நேரத்தில் அரசியல் சாசனப்படி தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
பல்கலை.க்கு துணை வேந்தர் நியமிக்காததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அரசியல் சாசன விதிமுறைகளின் படி ஆளுநர் நடந்துகொள்வதில்லை என குற்றம்சாட்டப்பட்டது. ஆளுநர் அரசியல் சாசன விதிகளுக்கு கட்டுப்பட்டவர். ஆளுநர்கள் அவ்வாறு நடந்துகொள்ளாததால் மாநிலத்திற்கு ஆளுநர் தேவையா என்ற வாதங்கள் கூட நடைபெற்று வருகிறது. அதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சுட்டுக்காட்டினார்.
ஆளுநர் மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைத்துவிட்டார் என்றால், நாங்கள் என்ன நிவாரணம் வழங்க முடியும் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டால், ஒன்றிய அரசின் ஆலோசனைப்படியே முடிவு எடுக்கப்படும். அதே வேலையில் அரசியல் சாசன விதி 200-ன் படி ஆளுநர் செயல்பட உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அரசியல் சாசன விதி 200-ன் படி மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போடமுடியாது எனவே அரசியல் சாசன விதி 200-ன் படி ஆளுநர் செயல்பட உத்தரவிடவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஒரு வேலை மசோதா சரியாக இல்லை என்ற காரணத்தால் தான் ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்களாம் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய தமிழக வழக்கறிஞர், இதற்கு வேறு வழியில்லை. ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்ற நிலையே உள்ளது. இது பல வழக்குகளில் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிவித்தார்.
தமிழக அரசு வழக்கறிஞர் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஆளுநர் விவகாரத்தில் மாநிலத்தின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும். ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவு எடுக்கிறார் என்பதை நாளை தெரிவிக்க ஒன்றிய அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர்.