தொகுதி மாற தயாராகி வரும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘டீம் ஆய்வு அறிக்கையால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தொகுதி மாற தயாராகி விட்டாராமே மாஜி அமைச்சர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் இலை கட்சி மாஜி அமைச்சர் விஜயமானவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் கள நிலவரம் குறித்து ரகசிய சர்வே செய்ய தனது டீமுக்கு ரகசிய உத்தரவிட்டு இருந்தாராம்.. அதன்படி, அந்த டீம் ஆய்வு செய்து, அறிக்கையை அவரிடம் கொடுத்து இருக்கு.. அந்த அறிக்கையை படித்து பார்த்த மாஜி அமைச்சர் கடும் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்..
இதனால் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்திலேயே வேறு ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம்.. இதற்காக அந்த தொகுதியின் நிலவரம் குறித்து ஆராயவும் அவரது டீமுக்கு உத்தரவிட்டு இருக்காரு.. இதற்கான வேலைகள் திரைமறைவில் ரகசியமாக நடந்துக்கிட்டு வருது.. இதில், வரும் முடிவுகளை வைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைக்கும் மாஜி அமைச்சர் முடிவு செய்திருக்காரு.. இந்த டாப்பிக் தான் கட்சிக்குள்ளே அரசல்புரசலாக ஓடுகிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
‘‘அல்வா ஊர் எம்எல்ஏ மலராத தேசிய கட்சிக்கு தாவினாலும் கூட இன்னும் இலைக்கட்சியின் பாசம் போகலையாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அல்வா ஊரின் எம்எல்ஏ இலை கட்சியில் இருந்து மலராத தேசிய கட்சிக்கு தாவியவர். பிறகு தேசிய கட்சி சார்பில் அல்வா ெதாகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆனதுடன் அந்த கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் உயர்ந்தார். அது மட்டுமல்லாது, தனது வாயால் மலையானவர் பதவி காலியான போது அந்த கட்சியின் மாநில தலைவர் பதவியையும் அல்வா ஊரின் எம்எல்ஏ பிடித்து விட்டார்..
எனினும் அவரது பழைய இலை கட்சி பாசம் அவரை விட்டு இன்னும் போகலையாம்.. அல்வா ஊரில் பேட்டி அளித்த அவர், கோபிக்காரர் நடிகர் கட்சிக்கு மாறியது குறித்து பேசுகையில், இலை கட்சி துவக்கத்தில் இருந்து இன்று வரை எப்படி உள்ளது என்று விவரித்ததோடு, கோபிக்காரரால் இலை கட்சிக்கு ஓட்டு குறையாது என பேசினாராம்.. இதனால் இவர் மலராத தேசிய கட்சியின் மாநில தலைவர் தானா என செய்தியாளர்களுக்கே சலிப்பு தட்டியிருக்கு..
அதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒரு படி மேலே போய் இலை கட்சி பெரிய வாக்கு வங்கியை கொண்டுள்ள கட்சி என்றும் வர்ணிச்சிருக்காரு.. என்ன தான் இலை கட்சியில் இருந்து வந்தாலும், நமது கட்சியை பற்றி பேசாமல் இப்படி இலை கட்சியை தாங்கி, தூக்கிப் பிடிக்கிறாரே, இவர் என்ன இலை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரா, இதற்காக தான் சேலம்காரரை வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து வைத்தாரோ என தேசிய கட்சியினர் தலையில் அடித்துக் கொள்கின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி இளைஞர் பிரிவு உறுப்பினர் சேர்க்கைக்காக தலைமையிடம் கொடுத்த கணக்கு போலி என அறிக்கை போயிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் இளைஞர் பிரிவிற்கு பொறுப்பாளராக பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தின் வேடன் பெயரில் துவங்கும் தொகுதியின் மாஜியான சிவனின் பெயரைக் கொண்ட டாக்டர் உள்ளார்.. இவரிடம் சேலத்துக்காரர் ஒவ்வொரு பூத்திற்கும் 25 பேர் வீதம் 17 லட்சம் பேரை இளைஞர் பிரிவில் உறுப்பினராக்க வேண்டுமென டாஸ்க் கொடுத்திருந்தாராம்..
வேகமாக கணக்கு பார்த்த டாக்டரால் இதுவரை 11 லட்சம் பேரைத்தான் கணக்கு காட்ட முடிந்ததாம்.. முழுமையாக டாஸ்க்கை முடிக்க முடியாமல் ரொம்பவும் திணறிப்போனாராம்.. அதுவும் கொடுத்த பட்டியலை சரிபார்த்த போது, பெரும்பகுதியினர் 50 வயதை தாண்டியவர்களாக இருந்திருக்காங்க.. மீதமுள்ள இளைஞர்களில் பலர் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்ததாம்..
இளைஞர் பிரிவில் சேர்க்கைக்காக கொடுக்கப்பட்ட கணக்கு போலி கணக்கு என தலைமைக்கு அறிக்கை போயிருக்கு.. இதனால் அதிர்ச்சியடைந்த சேலத்துக்காரர், டாக்டரை அழைத்து ரொம்பவே கடிந்து கொண்டாராம்.. இந்த விவகாரம் தான் பூட்டு மாவட்ட இலைக்கட்சியில் ஒரே பரபரப்பான பேச்சாக இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புல்லட்சாமியின் கட்சியை கபளீகரம் செய்ய மலராத கட்சி திட்டமிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சின்னஞ்சிறிய மாநிலமான புதுவையில் புல்லட்சாமி கட்சியும், மலராத கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருது.. தேர்தல் நெருங்க நெருங்க புதிய கட்சிகள் வரவு அதிகமாகிறது. அதிலும் மலராத கட்சியின் பி டீம் எனக்கூறி கொள்ளும் லாட்டரி அதிபர் மகனின் இயக்கமும் அடுத்த மாதம் கட்சியாக மாற போகிறதாம்.. இதற்காக புதுவை, காரைக்காலில் 28 தொகுதிகளிலும் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கி உள்ளனராம்..
ஆண்டுக்கு ஐந்து ஆயிரம் கோடி வரி கட்டும் அவர், ஓட்டுக்கு ஐந்து ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளதாக எடுபிடிகள் கூறி வர்றாங்களாம்.. மேலும் ஆளும் புல்லட்சாமியின் அரசையும் லாட்டரி அதிபர் மகன் கடுமையாக சாடி வருகிறாராம்.. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அனைத்து திட்டத்திலும் ஊழல் நடக்கிறது என பல்வேறு நிகழ்ச்சியில் பேசுவது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாம்..
ஆனால் மலராத கட்சியின் டெல்லி தலைமையோ அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லையாம்.. அதிபர் மகன், பணத்தை செலவு செய்து வெற்றி பெற வேண்டும். புல்லட்சாமியுடன் கூட்டணி அமைத்து மலராத கட்சி வெற்றி பெறும்போது, லாட்டரி அதிபர் மகனை கட்சியில் இணைத்து கொண்டு மலராத கட்சி ஆட்சியை தனி மெஜாரிட்டியில் ஏற்படுத்த வேண்டும் என பிளான் போட்டு உள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்..
இதனால் புல்லட்சாமி தேர்தல் நேரத்தில் மலராத கட்சியை கழற்றி விட்டுவிட்டு புதிய கூட்டணி அமைப்பார் என அவரது கட்சி நிர்வாகிகள் கூறுவது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.