தொகுதி ஒதுக்கீடு முடியாத நிலையில் 71 வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ: பீகார் சபாநாயகருக்கு சீட் இல்லை, 2 துணை முதல்வர்களுக்கு இடம்
பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. முதற்கட்ட மாக தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 17 ஆகும். ஆனால் பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தாலும், தொகுதி ஒதுக்கீடு முடியவில்லை. இந்த சூழலில் 71 வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ வெளியிட்டது. 7 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு வந்த பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் 72 வயதான நந்த் கிஷோர் யாதவுக்கு சீட் மறுக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, தாராபூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். இன்னொரு துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் சட்ட அமைச்சர் மங்கல் பாண்டே, சிவான் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். லாலுவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த முன்னாள் ஒன்றிய அமைச்சரான ராம் கிருபால் யாதவ், பாட்னாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள டானாபூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
அமைச்சர்கள் ரேணு தேவி (பெட்டியா), நிதின் நபின் (பங்கிபூர்), நிதிஷ் மிஸ்ரா (ஜான்ஜர்பூர்), ஜிபேஷ் மிஸ்ரா (ஜேல்), சஞ்சய் சரோகி (தர்பங்கா), நீரஜ் குமார் சிங் பப்லு (சட்டாபூர்) மற்றும் கேதர் பிரசாத் குப்தா (குர்ஹானி) ஆகியோர் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் கலை மற்றும் கலாச்சார அமைச்சர் மோதிலால் பிரசாத் வென்ற ரிகா தொகுதி பைத்யநாத் பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 10 எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்கப்படவில்லை.
2020 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் பிக்ரம் தொகுதியில் வெற்றி பெற்ற சித்தார்த் சவுரவ், நேற்று முன்தினம் பா.ஜவில் சேர்ந்த அடுத்தநாள் அதே தொகுதியில் பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தொகுதி ஒதுக்கீடு முடிவதற்கு முன்பு பா.ஜ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதால் ஐக்கிய ஜனதாதளம் உள்பட கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன.
* இந்தியா கூட்டணியில் இன்று காலை தொகுதி பங்கீடு
காங்கிரஸ் இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் இன்று காலைக்குள் தொகுதிப் பங்கீட்டு ஏற்பாடு அறிவிக்கப்படலாம் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் அபய் துபே தெரிவித்தார்.
* சீட் வழங்கிய லாலு தடுத்து நிறுத்திய தேஜஸ்வி
அக்.17ல் முதற்கட்ட தேர்தல் மனுத்தாக்கல் முடிவதாலும், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு முடியாததாலும் அதிருப்தி அடைந்த லாலுபிரசாத், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு கடிதம் வழங்கினார். இதை அறிந்த தேஜஸ்வி யாதவ் தந்தை லாலுவை தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து சீட் விநியோகம் நிறுத்தப்பட்டது. இன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மருமகளுக்கும், அவரது தாய்க்கும் சீட் ஒதுக்கிய ஜிதன்ராம் மஞ்சி
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் இமாம்கஞ்ச் தொகுதியில் ஜிதன்ராம் மஞ்சியின் மருமகள் தீபா நிறுத்தப்பட்டுள்ளார். பரசட்டி தொகுதியில் மருமகள் தீபாவின் தாயார் ஜோதி தேவி நிறுத்தப்பட்டுள்ளார்.