தண்டவாளத்தில் கல்லை வைத்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி
கோவை: திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:12696) நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. நேற்று அதிகாலை 2.10 மணி அளவில் பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் ரயில்வே பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கல் மீது ரயில் மோதியதில் கல் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. இது குறித்து லோகோ பைலட் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர்.
தண்டவாளம் பகுதிக்கு மோப்பநாய் அழைத்து செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ரயில்வே போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. எனவே, போதை ஆசாமிகள் யாராவது தண்டவாளத்தில் கல்லை வைத்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கோவையில் அதிகாலை நேரம் தண்டவாளத்தில் கற்களை வைத்து எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த சதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.