சாலையோரம் கிடந்ததாக டிராமா நடத்திய விவகாரம்; போலீஸ் போட்ட கிடுக்கிப்பிடியில் குழந்தையை வளர்க்க சம்மதம்: ‘லிவிங் டு கெதர்’ மாணவியுடன் காதலனும் பகீர் வாக்குமூலம்
சென்னை: சாலையோரம் குழந்தை கிடந்ததாக நாடகமாடிய விவகாரத்தில் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையால் குழந்தையை நாங்களே வளர்ப்பதாக ‘லிவிங் டு கெதர்’ கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் தனது குழந்தையை அனாதை என்று வீச முயன்ற காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவர் கட்டைபையுடன் வந்தார். அப்போது மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டியுடன் அந்த வாலிபர், கட்டைபையுடன் குழந்தை ஒன்று சாலையோரம் கிடந்ததாகவும், அதை எடுத்து வந்ததாக கூறினார். அதை கேட்ட செக்யூரிட்டிகள் உடனே அருகில் உள்ள திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி விரைந்து வந்த போலீசார் கட்டப்பையில் பச்சிளம் குழந்தையுடன் வந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று குழந்தையை மீட்டு புகைப்படம் எடுத்து வாலிபரை பாராட்டினர். பிறகு வாலிபரிடம் குழந்தையை எங்கிருந்து மீட்டாய் என கேட்ட போது, சரியாக சொல்ல முடியாமல் திணறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை அழைத்து சென்று நேரடியாக விசாரணை நடத்திய போது, வாலிபர் ‘சார் இது எனது லவ்வருக்கும் எனக்கும் பிறந்த குழந்தை... என்றும் எனது லவ்வர் லாட்ஜில் இருப்பதாக ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் வாலிபருடன் லாட்ஜிக்கு சென்று குழந்தையை பெற்ற இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை எங்களுடையது தான் என்று கூறினர். இளம் பெண் மிகவும் பலவீனமாக இருந்ததால், போலீசார் உடனே குழந்தை மற்றும் இளம் பெண்ணை கஸ்தூரிபாய் தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தை ஒன்றரை ஜிலோ எடை மட்டு இருந்ததால் டாக்டர்கள் குழந்தையை இங்க்பேட்டரில் வைத்து கவனித்து வருகின்றனர். பிறகு குழந்தை பிறந்த இடம் கோட்டூர்புரம் காவல் எல்லையில் இருந்ததால், பிடிபட்ட வாலிபரை திருவல்லிக்கேணி போலீசார் கோட்டூர்புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையிலான போலீசார் அனாதை குழந்தை என்று வீச முயன்ற வாலிபர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம் பெண்ணிடம் விசாரணை நடத்திய போது இருவரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: நான் ஊட்டியை சேர்ந்த பிரவீன்(21). நான் ஊட்டியில் படிக்கும் போது, சேலத்தை சேர்ந்த ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) எங்கள் கல்லூரியில் இளங்கலை படித்தார். நாங்கள் இருவரும் ஒன்றாக படிக்கும் போது காதல் ஏற்பட்டது.
இளம் பெண் சற்று வசதியான குடும்பம் என்பதால் அவர் ஊட்டியில் தனியாக அறை எடுத்து தங்கி படித்து வந்தார். அப்போது நான் முதுநிலை படிப்பு முடித்து இருந்தேன். அப்போது நானும் ராணியுடன் ‘லிவிங் டு கெதர்’ முறையில் அவருடன் தங்கி கணவன் மனைவி போல் ஒன்றாக இருந்தோம். பல இடங்களுக்கு நாங்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சுற்றி உல்லாசமாகவும் இருந்தோம். இதனால் ராணி கர்ப்பமானார். கர்ப்பத்தை நான் கலைக்க சொன்னேன். அதற்கு ராணி வேண்டாம். எனது பெற்றோர் சம்மதம் பெற்று இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டார். நானும் சற்று அஜாக்கிரதையாக இருந்தேன். ஒரு கட்டத்தில் கரு வளர்ந்து விட்டது.
பிறகு இளநிலை படிப்பை முடித்த ராணி மேல் படிப்பு படிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார். அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படிக்க தேர்வானார்.
அதன்படி கடந்த 6ம் தேதி தான் சென்னை பல்கலைக்கழகத்தில் ராணி சேர்ந்தார். அவர் கோட்டூர்புரம் பகுதியில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவிகள் விடுதியில் தங்கினார். பல்கலைக்கழகத்தில் சேரும் போது ராணி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். வீட்டில் ராணி தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதால் அதனால் சற்று வயிறு வீக்கமாக இருப்பதாக பெற்றோரிடம் கூறி சமாளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக கர்ப்பிணிக்கான ஊட்டச்சத்து மாத்திரையை காட்டி சமாளித்துள்ளார். இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை இரவு எனக்கு ராணி போன் செய்தார். நான் குரூப்-1 தேர்வுக்காக சைதாப்பேட்டையில் தங்கி படித்து வருகிறேன். இதனால் ராணி போன் செய்ததும் நான் பல்கலைக்கழக விடுதிக்கு சென்றுவிட்ேடன். அப்போது விடுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டியுடன் ராணிக்கு உடல் நிலை சரியில்லை.
நான் ராணியின் சகோதரியின் கணவர் என்று கூறி விடுதிக்குள் சென்றேன். அப்போது ராணி விடுதி கழிவறையில் தனக்கு தானே பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை பெற்றார். நான் அவருக்கு உதவி செய்தேன். பிறகு குழந்தை பிறந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் கழிவறையை சுத்தம் செய்துவிட்டு ஒரு கட்டப் பையில் குழந்தையை வைத்து, மருத்துவமனைக்கு செல்வதாக செக்யூரிட்டியுடன் கூறிவிட்டு ஆட்டோவில் திருவல்லிக்கேணிக்கு வந்து லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினோம். ராணி குழந்தை பெற்ற நேரத்தில் அவருடன் அறையில் தங்கிய மாணவிகள் ஊருக்கு சென்று இருந்ததால் யாருக்கும் தெரியாமல் போனது. சக மாணவிக்கு ராணி கர்ப்பமாக இருப்பது தெரியும்.
பிறகு ஒரு நாள் முழுவதும் இருவரும் குழந்தையை வளர்க்கலாமா அல்லது வெளியே வீசிவிடலாமா என்று பேசினோம்.
ஏன் என்றால் திருமணம் செய்யாமல் ‘லிவிங் டு கெதர்’ மூலம் குழந்தை பிறந்ததால் எங்கள் இருவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்று முடிவு செய்தோம். ஒரு கட்டத்தில் குழந்தையை சாலையோரம் வீச முடியாமல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சாலையோரம் குழந்தை கிடந்ததாக கூறி ஒப்படைத்துவிடலாம் என நாங்கள் இருவரும் முழு மனதுடன் சென்ற போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். அதைதொடர்ந்து போலீசார் குழந்தையை பெற்ற மாணவி மற்றும் காதலனிடம் குழந்தை வளர்ப்பது குறித்து கவுன்சலிங் அளித்தனர். அப்போது மாணவி எனது பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்ற நோக்கத்தில் தான் குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைக்க முடிவு செய்தேன். எனது பெற்றோர் எங்கள் காதலை ஏற்று கொண்டால் நாங்கள் குழந்தையை வளர்க்கிறோம் என்று கூறினார்.
அதையே பிரவீனும் கூறினார். பின்னர் போலீசார் சம்பவம் குறித்து மாணவி மற்றும் காதலனின் ெபற்றோர்களிடம் பேசினர். அதை தொடர்ந்து தற்போது மாணவியும் அவரது காதலனும் குழந்தையை வளர்ப்பதாக போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இருந்தாலும், போலீசார், 12 வயதுக்குட்பட்ட குழந்தையை பெற்றோர் கைவிடும் பட்சத்தில் அது குற்றமாக கருதப்படும். மேலும், குழந்தையின் மரணத்திற்கு இது வழிவகுத்தால், கொலை அல்லது மரணம் விளைவிக்கும் குற்றமாக கருதப்படும். என காதலன் பிரவீன் மீது கோட்டூர்புரம் போலீசார் பிஎன்எஸ் 93 சட்டப்படி வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்கும் போது மாணவி ஒருவர் காதலனுடன் ‘லிவிங் டு கெதர்’ மூலம் குழந்தை பெற்று அதை சாலையோரம் கிடந்ததாக மருத்துவமனையில் ஒப்படைத்த விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.