சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக பீகாரில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: கார்கே, ராகுல்காந்தி பங்கேற்பு
பாட்னா: பீகாரில் அக்டோபர் மாதம் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பீகாரில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சிகளில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெற உள்ளது. காலை 10மணிக்கு சதகத் ஆசிரமத்தில் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காரிய கமிட்டியின் உறுப்பினர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கிறார்கள்.
பீகாரில் காங்கிரசின் பிரச்சார உத்தி, எதிர்கால கருத்துக்கணிப்புகள் மற்றும் வாக்குத் திருட்டு என்று கூறப்படும் பாஜ மீதான தாக்குதலை அதிகரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். மேலும் வாக்குத் திருட்டு பிரச்னை மற்றும் பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து காரிய கமிட்டி முக்கிய தகவலை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.