காங். காரிய கமிட்டியில் தீர்மானம் வெளியுறவு கொள்கையில் மோடி அரசு படுதோல்வி: பீகாரிலிருந்து பாஜ ஆட்சியின் முடிவு தொடங்கும் என கார்கே சூளுரை
பாட்னா: பீகாரில் வரும் நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் உத்தி குறித்து ஆலோசிக்கவும், வாக்கு திருட்டு தொடர்பாக பாஜ மீதான தாக்குதலை தீவிரப்படுத்தவும் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொருளாளர் அஜய் மக்கன், பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சச்சின் பைலட், பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘இந்தியா சர்வதேச மற்றும் தேசிய அளவில் மிகவும் சவாலான, கவலையளிக்கும் காலகட்டத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. சர்வதேச மட்டத்தில் நமது பிரச்னைகள் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் ராஜதந்திர தோல்வியின் விளைவாகும். பிரதமர் ‘எனது நண்பர்கள்’ என்று பெருமை பேசும் நபர்கள்தான் இன்று இந்தியாவை ஏராளமான பிரச்னைகளில் சிக்க வைக்கின்றனர். நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்கள் நடப்பதே ஜனநாயகத்தின் அடித்தளம்.
ஆனால் இன்று தேர்தல் ஆணையத்தின் நேர்மை, வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க சதி நடந்து வருகிறது. வரப்போகும் சட்டமன்றத் தேர்தல் பீகாருக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு மைல்கல்லாக இருக்கும். மோடி அரசின் ஊழல் ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் இங்கிருந்து தொடங்கும்’’ என்றார். ராகுல் காந்தி பேசுகையில், ‘‘மோடி அரசாங்கம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை எதிர்த்து நிற்க வேண்டும், இந்தியாவின் தேசிய நலனை முன்னணியில் வைத்திருக்க வேண்டும்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் அரசியல் ரீதியாகவும், பீகார் மக்களுக்கு வேண்டுகோள் என்ற வகையிலும் 2 விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சீனாவை நோக்கிய பிற்போக்குத்தனமாக சாய்ந்த மோடி அரசின் முயற்சி நோயை விட மோசமான சிகிச்சை என்றும் காரிய கமிட்டி விமர்சித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆணவத்தனம் அவருக்கே எதிராக மாறி இன்று சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வாக்கு திருட்டு மோசடி என்பது அரசியலமைப்பு, பொருளாதாரம், சமூக நீதி மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான தாக்குதல்களிலிருந்து பிரிக்க முடியாதது என்று கூறியது.
* பீகார் மக்களுக்கு 10 வாக்குறுதிகள்
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை தொடர்ந்து நடந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நீதி வழங்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் கருத்தரங்கத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, ராகுல் 10 வாக்குறுதிகளை வெளியிட்டார். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இருப்பது போல பிசி வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும் என ராகுல் வாக்குறுதி அளித்தார். ரூ.25 கோடி வரையிலான அரசு ஒப்பந்தங்களில் 50 சதவீதம் எஸ்சி, எஸ்சி, பிசி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.