காங்கிரசில் துரோகிகள் பாஜவுக்கு வேலை செய்வோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்: குஜராத்தில் ராகுல் காந்தி எச்சரிக்கை
ஒரு தரப்பினர் நேர்மையாக இருப்பவர்கள், பொதுமக்களுடன் இணைந்து போராடுபவர்கள், இதயத்தில் காங்கிரசின் சித்தாந்தத்தை சுமந்து கட்சிக்காக உழைக்கிறார்கள். மற்றொரு தரப்பினர் மக்களுடன் தொடர்பு இல்லாதவர்கள். மக்களை மதிக்காதவர்கள். அவர்களில் பாதி பேர் பாஜவுக்காக வேலை செய்கிறார்கள். இப்படிப்பட்ட நபர்களை கட்சியிலிருந்து வடிகட்டுவது தான் முதல் வேலை. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் நீக்கப்பட வேண்டும்.
அதை செய்ததும் குஜராத் மக்கள் காங்கிரசில் சேர விரும்புவார்கள். அவர்களுக்கான கதவை நாம் திறப்போம். பாஜவின் 30 ஆண்டு ஆட்சியில் குஜராத் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். வைரம், ஜவுளி மற்றும் பீங்கான் தொழில் சீர்குலைந்துள்ளது. குஜராத் விவசாயிகளைப் பாருங்கள். அவர்கள் ஒரு புதிய தொலைநோக்குப் பார்வைக்காக ஏங்குகிறார்கள். இந்த தொலைநோக்கு பார்வையை காங்கிரசால் எளிதில் வழங்க முடியும். ஆனால் கட்சியில் களை எடுக்காவிட்டால் இது சாத்தியமில்லை.
நான் வெட்கத்தினாலோ அல்லது பயத்தினாலோ பேசவில்லை. குஜராத்துக்கு வழி காட்ட எங்களால் முடியவில்லை. ஏனென்றால் 30 ஆண்டாக காங்கிரஸ் இங்கு அதிகாரத்தில் இல்லை. நாம் நமது பொறுப்புகளை நிறைவேற்றாவிட்டால், குஜராத் மக்கள் நம்மைத் தேர்தலில் வெற்றி பெற விடமாட்டார்கள். எங்களுக்கு அதிகாரத்தை தருமாறு நாம் கேட்கக்கூடாது. நமது பொறுப்புகளை நாம் நிறைவேற்றிய நாளில், குஜராத் மக்கள் அனைவரும் நம்மை ஆதரிப்பார்கள் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.