2.40 லட்சம் வாக்குகளில் 30 ஆயிரம் போலி குஜராத்திலும் வாக்கு திருட்டு: ஆதாரங்களை வெளியிட்டது காங்கிரஸ்
அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலிலும் வாக்கு திருட்டு நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா கூறுகையில், ‘‘குஜராத் பாஜ தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சிஆர் பாட்டில் பிரதிநிதித்துவப்படுத்தும் நவ்சாரி மக்களவை தொகுதியின் கீழ் வரும் சோரியாசி சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலை காங்கிரஸ் ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளது. இதில் பெரிய அளவிலான வாக்குத் திருட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் ஜனநாயக செயல்முறையின் அடிப்படையாகும்.
அது சேதமடைந்தால் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தமாகும். சோரியாசி சட்டமன்ற தொகுதியில் தொடங்கி மாநிலத்தின் வாக்காளர் பட்டியல் முழுவதையும் சரிபார்ப்பதற்கு முடிவு செய்துள்ளோம். குஜராத்தில் ஒருவர் பல வாக்குகளை பதிவு செய்கிறார். இதன் காரணமாக முழு முடிவும் மாறுகிறது. மக்களின் வாக்குகளை திருடும் சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்துவதற்கு காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பாட்டிலின் மக்களவை தொகுதியின் கீழ் வந்ததால் சோரியாசி தொகுதியில் காங்கிரஸ் கவனம் செலுத்தியது. அங்கு அவர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சோரியாசியில் உள்ள சுமார் 6 லட்சம் வாக்காளர்களில் காங்கிரஸ் கட்சியானது 40 சதவீதம் அல்லது சுமார் 2.40லட்சம் வாக்காளர்களை சரிபார்த்தது. இதில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அதாவது 30 ஆயிரம் வாக்குகள் அங்கு போலி அல்லது அங்கு இல்லை. அவர்களின் பெயர்கள், வயது, குடும்பப்பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டைகள் சந்தேகங்களை எழுப்பின. இது பாஜவின் மாநில தலைவரும், அமைச்சருமான ஒருவரின் மக்களவை தொகுதியின் கீழ் வரும் சட்டமன்ற தொகுதியாகும்.
அவர் தொடர்ந்து தேர்தல்களில் சாதனை வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். ஒரு பெரிய பாஜ தலைவர் வெற்றி பெற்ற தொகுதியில் லட்சக்கணக்கான வாக்கு திருட்டு நடந்துள்ளதை 100 சதவீத ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளோம். ஒரு தொகுதியில் இவ்வளவு மோசடி நடந்தால் மாநிலம் முழுவதும் எவ்வளவு மோசடி நடந்து இருக்கும் என்று பாருங்கள். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் மாநிலம் முழுவதும் இதே அளவு மோசடி நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* 62 லட்சம் வாக்குகள் திருட்டு
குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா கூறுகையில்,’ குஜராத் முழுவதும் சுமார் 62 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளது. சோரியாசி தொகுதியில் ஐந்து வெவ்வேறு முறைகளில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. வாக்காளரின் பெயர், குடும்பப்பெயர், புகைப்படம், எழுத்துகளில் மாறுபாடு அல்லது பிழை, ஒரே வாக்காளருக்கு வெவ்வேறு வாக்காளர் அட்டைகள், குஜராத்தி தவிர வேறு மொழிகளில் வாக்காளர் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ள நபர் ஒரே மாதிரியாக இருப்பதும், ஆனால் குடும்பப்பெயரில் ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்கள் மாற்றப்பட்டு, ஒரு புதிய வாக்காளர் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் இன்று அகமதாபாத் ஆட்சியரைச் சந்தித்து வாக்காளர் உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடங்குவார்கள். இது அடுத்த சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 2027 வரை தொடரும்’ என்றார்.