அதானி குழுமத்துக்கு நற்சான்றிதழ்; செபியின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி கேள்வி: முழுமையான விசாரணைக்கு மீண்டும் கோரிக்கை
புதுடெல்லி: ஹிண்டன்பர்க் முறைகேடு வழக்கில் அதானி குழுமத்துக்கு செபி நற்சான்றிதழ் வழங்கியதை, இது முழுமையற்ற விசாரணை எனக் கூறி காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து உள்ளது. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் பங்குச்சந்தையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, 24 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், 24 குற்றச்சாட்டுகளில் இரண்டு விவகாரங்களில் மட்டும் அதானி குழுமம் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என செபி நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
செபியின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘செபியின் இந்த அறிக்கை முழுமையானது அல்ல. மீதமுள்ள 22 குற்றச்சாட்டுகளின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். உள் வர்த்தக மோசடி, வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மூலம் நடந்த சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் குறித்து செபி இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. எனவே, அரசு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி அதானி குழுமத்துக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறப்படும் ‘மோதானி’ (மோடி - அதானியை குறிக்கும் சொல்) முறைகேடு குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம், இந்திய மின்திட்ட ஒப்பந்தங்களுக்காக அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவில் நடைபெற்று வரும் விசாரணை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.