ஆர்எஸ்எஸ் குறித்து இழிவாக பேசிய காங்கிரஸ் எம்எல்ஏவை மேடையிலேயே கைது செய்த மத்திய பிரதேச போலீஸ்
போபால்: ஆர்எஸ்எஸ் குறித்து சர்ச்சை கருத்து கூறிய காங்கிரஸ் எம்எல்ஏவை மேடையிலேயே மத்திய பிரதேச போலீஸ் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அசோக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சாகேப் சிங் குர்ஜார் பேசுகையில், ‘ஆண்மை உள்ளவர்கள் போருக்குச் சென்றனர்; திருநங்கைகள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தனர்’ என்று மிகவும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கூறினார். எம்எல்ஏவின் இந்தப் பேச்சுக்கு, அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேடையின் அருகே நின்றிருந்த போலீசார், அடுத்த சில நிமிடங்களில் மேடையேறினர். அவர்கள் எம்எல்ஏ சாகேப் சிங் குர்ஜார், வெறுப்பு பேச்சு பேசியதாக கூறி அவரை கைது செய்வதாக அறிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எம்எல்ஏ சாகேப் சிங் குர்ஜாரை அங்கிருந்து போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். எம்எல்ஏ உரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, மாநில அரசியலில் பெரும் புயல் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏவின் பேச்சுக்கு மாநில பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக அமைச்சர் விஸ்வாஸ் சாரங், ‘தாங்களே தவறு செய்துவிட்டு, அதிலிருந்து தப்பிக்க அரசியலமைப்பையே அவமதிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத கமல்நாத், அஜய் சிங் போன்ற மூத்த தலைவர்களையே எம்.எல்.ஏ சாகேப் சிங் திருநங்கைகள் என்று கூறுகிறாரா?; முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், ஜித்து பட்வாரி போன்ற மூத்த தலைவர்கள் இருந்த மேடையில் இப்படியொரு பேச்சை பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எம்எல்ஏவின் பேச்சு, மூன்றாம் பாலினத்தவரை மட்டுமல்ல, பெண்களையும் அவமதிக்கும் செயல்’ என்றார்.