திமுக- காங்கிரஸ் முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரசின் ஐவர் குழு சந்திப்பு
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் களம் மெதுவாய் சூடுப்பிடிக்க தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் பிரசாரம், பொதுக்கூட்டம், ரோட் ஷோ என நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஒற்றுமையாக இருப்பதால் வலுவாக உள்ளது. அதிமுக தன்னுடன் பாஜவை இணைத்தது முதல் வேறு எந்த கட்சியும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இதுவரை வரவில்லை. இந்த சூழ்நிலையில், திமுக தேர்தல் களத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்பு தான் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என நடைபெறும். ஆனால் திமுக கூட்டணியில் இப்போதே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க முடிவு செய்தது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைமை, 5 பேர் கொண்ட குழுவை அறிவித்தது. இந்த குழுவானது இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது.
இந்த குழுவில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், இன்று காலை இந்த 5 பேர் குழுவினர், சென்னை சத்தியமூர்த்திபவனில் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். பிரிவுகளின் அமைப்பு தலைவர்களுடன் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதித்தனர். எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து முழுமையாக விவாதித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முறை அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசினாலும் வட மாநிலமான பீகாரிலேயே காங்கிரஸ் படுத்தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் எத்தனை சீட் கேட்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சத்தியமூர்த்திபவனில் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து விருப்ப பட்டியல் ஒன்றை இந்த குழு தயார் செய்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் திமுகவுடன் பேச்சுவார்த்தை முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் ஐவர் குழு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்படுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் சார்பில் தங்களுக்கு சாதகமான 125 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
அதிலிருந்து 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இந்த குழு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு நாடாளுமன்ற தொதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என தமிழ்நாட்டில் 39 சட்டமன்ற தொகுதிகளின் பட்டியலை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.