காங்கிரஸ் குறித்து அவதூறு மாஜி அமைச்சர் மீது எஸ்பியிடம் புகார் மனு
தேனி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கடந்த 15ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது, கட்சியை கலைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு காங். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக தேனி நகர காங். தலைவர் கோபிநாத் தலைமையில் நிர்வாகிகள் நேற்று தேனி மாவட்ட எஸ்பியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சி 140 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், விருதுநகரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என பேசியுள்ளார். மேலும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.