காங். மூத்த தலைவர் பவன் கேராவுக்கு 2 வாக்காளர் அட்டை: பாஜக வெளியிட்ட தகவலால் பரபரப்பு
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவின் தலைவரான பவன் கேராவுக்கு, புதுடெல்லி மற்றும் ஜங்புரா ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக பாஜகுற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் பாஜ தலைமையகத்தில் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில்,’ காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறை தலைவர் பவன் கேரா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருக்கிறார். ராகுல்காந்தியும், அவரது நெருங்கிய கூட்டாளியும் திருடர்கள். . ராகுல்காந்தியும், காங்கிரசும் ஒரு வாக்காளர் மோசடி கும்பலை நடத்தி வருகின்றன. இதில் பல வாக்காளர் அடையாள அட்டைகளை கொண்ட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது” என்றார்.
இது தொடர்பாக பவன் கேரா கூறுகையில்,‘‘என் பெயரை ஒரு தொகுதியில் இருந்து நீக்க கடந்த 2016-2017ம் ஆண்டில் விண்ணப்பித்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்று கூறினார். இது குறித்து டெல்லி மாவட்ட தேர்தல் ஆணைய அதிகாரி ,எக்ஸ் தளத்தில் பவன்கேராவுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பின் நகலை பகிர்ந்துள்ளார். செப்டம்பர் 8ம் தேதி காலை 11 மணிக்குள் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக பதிலளிக்குமாறு பவன் கேராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.