பணி நியமன ஆணையினைப் பெற்ற 15 நேரடி நியமன துணை ஆட்சியர்களுக்கு அமைச்சர் வாழ்த்து
சென்னை: பணி நியமன ஆணையினைப் பெற்ற 15 நேரடி நியமன துணை ஆட்சியர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-I தேர்வு மூலம் துணை ஆட்சியர் பணியிடத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 25-08-2025 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பணி நியமன ஆணையினைப் பெற்ற 15 நேரடி நியமன துணை ஆட்சியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துரையாடியதுடன், அவர்களது பணி சிறப்புடன் அமைய உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்நிகழ்வின்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பெ.அமுதா, கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் மு.சாய் குமார், மற்றும் கூடுதல் ஆணையர் (வருவாய் நிருவாகம்) ச.நடராஜன், ஆகியோர் உடனிருந்தனர்.