காங்கோ சுரங்கத் துறை அமைச்சர் உள்பட 20 பேர் இருந்த விமானம் ஓடுதளத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது!!
கின்ஷாசா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்த இடத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய சுரங்கத் துறை அமைச்சர் உள்பட 20 பேர் இருந்த விமானம் ஓடுதளத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. கின்ஷாசாவிலிருந்து திரும்பிய விமானம், விமான ஓடுபாதையில் இறங்கியபோது, அதன் வால் பகுதி தரையில் மோதியதில் விமானம் தீப்பற்றியதாகவும், வால் பகுதியில் பற்றிய தீ விமானம் முழுவதும் பரவிய நிலையில், அதற்குள் மீட்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு அதிலிருந்தவர்களை மீட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியாகும் வீடியோக்களில், வால் பகுதியிலிருந்து தீ பரவுகிறது, ஒரு சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியிலும், மற்றவர்கள் பயணிகளை வெளியேற்றுவதிலும் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலான பயணிகள் விமானத்தின் முன் படிகட்டு வழியாகவும், மற்றவர்கள் உடைந்த விமானத்தின் வழியாகவும் வெளியேறியிருக்கிறார்கள்.விபத்துக்குள்ளான விமானம் ஏர்ஜெட் அங்கோலா நிறுவனத்தைச் சேர்ந்தது என்றும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.