25 சதவீதம் பிடித்தம் செய்த நிலையில் ‘கன்பார்ம்’ டிக்கெட்டின் பயண தேதியை கட்டணமின்றி மாற்றலாம்: புதிய சலுகையை அறிவித்தது ரயில்வே
புதுடெல்லி: ரயில் பயணிகள் தங்கள் பயணத் தேதியை கட்டணமின்றி மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ரயில் பயணிகள் தங்களது பயணத் தேதியை மாற்ற விரும்பினால், உறுதி செய்யப்பட்ட (கன்பார்ம்) பயணச்சீட்டை ரத்து செய்து, உரிய ரத்துக் கட்டணத்தைச் செலுத்திய பின்னரே புதிய பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது. பயணத்திற்கு 48 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால், கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
நேரம் குறையக் குறைய இந்தக் கட்டணம் அதிகரிக்கிறது. பயணிகளின் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், இந்திய ரயில்வே புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல், உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டுகளின் பயணத் தேதியை பயணிகள் எவ்விதக் கட்டணமும் இன்றி ஆன்லைன் மூலமாக மாற்றிக்கொள்ளலாம். இந்தத் தகவலை ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘தற்போதுள்ள நடைமுறை பயணிகளுக்கு நியாயமற்றதாகவும், அவர்களின் நலனுக்கு எதிராகவும் உள்ளது. எனவே, பயணிகளுக்கு ஏற்ற புதிய மாற்றங்களைச் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார். இருப்பினும், புதிய பயணத் தேதிக்கு இருக்கை கிடைப்பதைப் பொறுத்தே உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்படும். ஒருவேளை புதிய பயணச்சீட்டின் விலை அதிகமாக இருந்தால், அந்த வித்தியாசத் தொகையை பயணிகள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.