டெல்லியில் நவம்பர் 16ம் தேதி மாநாடு: ஜவாஹிருல்லா அறிவிப்பு
சென்னை: சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அளித்த பேட்டி: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வக்பு திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகளை மீறக்கூடியவற்றிற்கு கோர்ட் இடைக்கால தடை விதிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய வக்பு வாரியத்தில் அதிகபட்சம் 4 இஸ்லாமியர் அல்லாதவரும், மாநில வக்பு வாரியத்தில் 3 இஸ்லாமியர் அல்லாதவர்களும் நியமிக்கலாம் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது அரசமைப்புக்கு எதிரானது. இந்து அல்லாதவர்கள் இந்து அறநிலையத்துறையில் உறுப்பினர்களாக ஆக முடியாது.
ஆனால் வக்பு வாரியத்தில் மட்டும் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று சொல்வது பாரபட்சமானது. பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் பயன்பாட்டில் உள்ள தர்கா உள்ளிட்ட நிறுவனங்களை மன்னர்கள் மத வழிபாட்டுக்காக வழங்கினார்கள். அதற்கான ஆவணங்கள் இருக்காது. ஆனால் அந்த சொத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இடைகால தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. வக்பு திருத்த சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி நவம்பர் 16ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாநாடு நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.